பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் வீதிகளில் சீனச் சுற்றுலாப் பயணி ஒருவர், அங்கு பர்தா அணிந்து சென்ற பெண்களிடம் மிகவும் அநாகரீகமாகச் சிகரெட்டை நீட்டி கிண்டல் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

அந்தப் பெண்கள் சங்கடத்துடன் அங்கிருந்து விலகிச் சென்றாலும், அந்த நபர் மற்றும் அவரது நண்பர்கள் கேமராவைப் பார்த்து நக்கலாகச் சிரித்துக் கொண்டே அவர்களைத் தொடர்ந்துள்ளனர்.

இதுமட்டுமின்றி, சாலையோரக் கடைகளில் காசு கொடுக்காமல் உணவை எடுத்துச் சாப்பிடுவது, பொதுமக்களை “கேங்ஸ்டர்” போல மிரட்டுவது என அந்த நபரின் அட்டூழியம் எல்லை மீறிச் செல்வதாக நெட்டிசன்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்தக் கொடூரச் செயல்கள் வீடியோ ஆதாரத்துடன் வெளிவந்தும், இஸ்லாமாபாத் போலீஸார் இதுவரை அந்தச் சீன நபர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது பாகிஸ்தான் மக்களிடையே பெரும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

“சீனாவிடம் வாங்கிய கோடிக்கணக்கான கடன்களால், அந்நாட்டு நபர்கள் தவறு செய்தாலும் கேட்கத் துணிவில்லாமல் பாகிஸ்தான் அரசு பயந்து நடுங்குகிறது” எனப் பலரும் சமூக வலைதளங்களில் சாடி வருகின்றனர்.

“நம் நாட்டுப் பெண்களை அவமதிக்கும் வெளிநாட்டவருக்குத் தண்டனை வழங்கக் கூட வக்கற்ற நிலையில் அரசு இருக்கிறதா?” எனப் பாகிஸ்தான் நெட்டிசன்கள் எழுப்பியுள்ள கேள்வி உலக அளவில் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.