துபாயில் பணியாற்றி வந்த திருச்சி இளைஞர், தனது நிறுவனத்தின் 47 லட்சம் ரூபாய் பணத்தைக் கையாடல் செய்துவிட்டுத் தோழியுடன் சென்னைக்குத் தப்பி வந்த நிலையில், அவரை கடத்திச் சென்று அடைத்து வைத்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சியைச் சேர்ந்த சரத்குமார் என்பவர் துபாயில் ஜெயமோகன் என்பவரது நிறுவனத்தில் கணக்காளராகப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஆறு மாதங்களாகச் சம்பளம் வழங்கப்படாத காரணத்தால், நிறுவனத்தின் வங்கி கணக்கிலிருந்து 47 லட்சம் ரூபாயைத் தனது கணக்கிற்கு மாற்றிக்கொண்டு, கோவையைச் சேர்ந்த தனது தோழி காவியாவுடன் அவர் சென்னைக்கு வந்துள்ளார். இதனையறிந்த ஜெயமோகன், சென்னையில் உள்ள தனது உறவினர் அருண்பாண்டியன் என்பவரிடம் சரத்குமாரைப் பிடித்து வைக்குமாறு கூறியுள்ளார்.

இதனையடுத்து சென்னை விமான நிலையம் அருகே சரத்குமாரையும் அவரது தோழியையும் பிடிக்க முயன்றபோது போலீசார் அவர்களை மீட்டனர். காவல் நிலையத்தில் சமரசமாகச் செல்வதாகக் கூறிவிட்டு வெளியே வந்த அருண்பாண்டியன் மற்றும் அவரது நண்பர்கள், சரத்குமாரையும் காவியாவையும் மீண்டும் காரில் கடத்திச் சென்று சாலிகிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் அடைத்து வைத்துத் தாக்கியுள்ளனர்.

இது குறித்துத் தகவல் அறிந்த போலீசார், செல்போன் சிக்னல் உதவியுடன் சாலிகிராமத்தில் உள்ள விடுதி ஒன்றில் பதுங்கியிருந்த அவர்களை மீட்டனர். இச்சம்பவம் தொடர்பாகக் கடத்தலில் ஈடுபட்ட அருண்பாண்டியன் உள்ளிட்ட நான்கு பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.