ஆன்லைன் ஷாப்பிங் மற்றும் குவிக் காமர்ஸ் செயலிகள் மூலமாகப் பொருட்களை ஆர்டர் செய்யும் போது, நமக்குத் தேவையான பொருட்கள் மட்டுமே டெலிவரி செய்யப்படுவது வழக்கம். ஆனால், டெல்லியைச் சேர்ந்த கிரியேட்டிவ் டைரக்டர் அங்கித் பாவா என்பவர், பிரபல மளிகைப் பொருட்கள் டெலிவரி செயலியான பிளின்கிட் (Blinkit) மூலம் சில பொருட்களை ஆர்டர் செய்திருந்தார். டெலிவரி வந்த பார்சலை அவர் ஆசையோடு பிரித்துப் பார்த்தபோது, உள்ளே அவர் ஆர்டர் செய்யாத ஒரு விசித்திரமான கவர் (Envelope) இருந்ததைக் கண்டு குழப்பமடைந்தார்.
அந்த கவரின் மேல், “இது தற்செயலாக நடந்தது அல்ல, திட்டமிட்டு வைக்கப்பட்டது. நல்ல புண்ணியம் கிடைக்க இதை உடனே படியுங்கள் – இப்படிக்கு சுசீலா” என்று உருக்கமாக எழுதப்பட்டிருந்தது பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியது. பதற்றத்துடனும் ஆர்வத்துடனும் அங்கித் பாவா அந்த கவரைத் திறந்து பார்த்தபோது, உள்ளே ‘சுசீலா’ என்ற பெண்மணியின் வேலைக்கான சுயவிவரக் குறிப்பு (Resume) இருந்துள்ளது. அதில் வீட்டு வேலைகளில் தனக்கிருக்கும் அனுபவம் மற்றும் நம்பகத்தன்மை குறித்து மிக எதார்த்தமாக எழுதப்பட்டிருந்தது.
ஆனால், அந்த வீடியோ வைரலான பிறகுதான் தெரியவந்தது, அது உண்மையான வேலை வாய்ப்புக்கான கடிதம் அல்ல; மாறாக, ‘அர்பன் கம்பெனி’ (Urban Company) நிறுவனத்தின் கீழ் இயங்கும் ‘இன்ஸ்டா ஹெல்ப்’ (InstaHelp) என்ற வீட்டு வேலை ஆட்களை வழங்கும் சேவை நிறுவனத்தின் ஒரு நூதன விளம்பர உத்தி என்பது அம்பலமானது. வழக்கமான ஆன்லைன் விளம்பரங்களைப் போல இல்லாமல், கஸ்டமர்களின் கவனத்தை ஈர்க்க பிளின்கிட் பார்சலுக்குள் இப்படி ரெஸ்யூம் வடிவில் விளம்பரம் வைத்த இந்த நிறுவனத்தின் கிரியேட்டிவிட்டி சோசியல் மீடியாவில் பாராட்டுக்களையும் வியப்பையும் பெற்று வருகிறது.
