தீபாவளி பண்டிகை நெருங்கியுள்ள நிலையில், இனிப்புகளும், பலகாரங்களும் செய்யும் பிஸியான நேரம் இது. ஆனால், பஞ்சாப்பின் ஜலந்தரில் உள்ள ஒருவரோ, சாதாரண சமோசாவை கூட கலையாக்கி காட்டியுள்ளார். தெருவோர கடை ஒன்றை நடத்தி வரும் இவர், ஒரே கடையில் 200 வகை சமோசாக்களை செய்து விற்பனை செய்து வருகிறார் என்பது தற்போது சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக சமோசா என்றால் உருளைக்கிழங்கு, பட்டாணி, வெங்காயம் கலந்து இருக்கும் பாரம்பரிய சுவையே நமக்கு நினைவிற்கு வரும். ஆனால் இந்த ஜலந்தர் கடைக்காரர் பீன்ஸ், வாழைப்பழம், பனீர், கோபி, சோயா, நூடுல்ஸ், காளான் என வித்தியாசமான சுவைகளில் சமோசா செய்து வாடிக்கையாளர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார்.

ஒவ்வொரு வகையிலும் தனித்துவமான சுவையும், பரிமாறும் முறையும் இருப்பதால் மக்கள் வரிசையாக கடைக்கு வந்து சுவைத்து வருகின்றனர். இதுகுறித்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அதனை லைக் செய்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் “இத்தனை வகை சமோசா பார்த்ததேயில்லை”, “இந்தக் கடைக்கு ஒரு முறை கண்டிப்பாக போகணும்” என்று கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர்.

தீபாவளி சீசனில் சமோசா ரசிகர்களுக்கு இது ஒரு வித்தியாசமான சுவை விருந்து என்று சொல்லலாம்.