கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழ குப்பத்தில் கூலி வேலை பார்க்கும் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம் 17-ஆம் தேதி சக்திவேல் அப்பகுதியில் இருக்கும் ஏரியில் குளித்துக்கொண்டிருந்தார். அப்போது கொத்தனாரான பத்மநாபன் என்பவர் வேலை முடித்துவிட்டு கை, கால்களை கழுவ வந்தார். அதே சமயம் ஏரிப்படியில் அமர்ந்திருந்த ஞானகுரு, ராஜசேகர் ஆகியோர் பத்மநாபனிடம் இங்கு கை கால்களை கழுவக்கூடாது என கூறி தகராறு செய்தனர்.

இதனை சக்திவேல் தட்டி கேட்டதால் கோபமடைந்த ஞானகுருவும், ராஜசேகரும் அவரை உருட்டு கட்டையால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த சக்திவேல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் ஞானகுரு, ராஜசேகர் ஆகிய இருவரையும் கைது செய்தனர். இந்த வழக்கினை விசாரித்த கடலூர் கூடுதல் அமர்வு நீதிமன்றம் இரண்டு பேருக்கும் தலா ஆயுள் தண்டனையும், தலா 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.