தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பி.பள்ளிப்பட்டி லூர்துபுரத்தில் அருண் பிரசாத் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பத்திரெட்டிஅள்ளி அரசு உயர்நிலை பள்ளியில் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு தணிகையேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். நேற்று முன்தினம் அருண் பிரசாத் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் அருண் பிரசாத் எழுதிய கடிதத்தை கைப்பற்றினர்.

அந்த கடிதத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு சிவசங்கர் என்பவரிடம் 8 லட்ச ரூபாய் மதிப்பில் 4 சென்ட் நிலம் வாங்கி வீடு கட்டி குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வசித்து வந்தேன். இந்நிலையில் சிவசங்கர் எனது வீட்டிற்கு செல்லும் 21 அடி பாதையை ஆக்கிரமித்து அதில் 16 அடிக்கு தென்னை மற்றும் தேக்கு மரங்கள் வைத்து இடையூறு செய்தார். இதுவரை வாங்கிய நிலத்தை கிரையம் செய்து கொடுக்காமல் ஏமாற்றி வந்ததோடு, வழி பாதையை சிவசங்கர் கேட் போட்டு மூடிவிட்டார்.

இது தொடர்பாக கேட்டால் சிவசங்கர், அவரது மனைவி ஜெயா ஆகியோர் என்னை மிரட்டி அவதூறாக பேசுகின்றனர். இதனால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். இந்த ஆண்டு எனது பள்ளியில் படிக்கும் ஒரு மாணவராக ஆங்கிலத் தேர்வில் 100 மதிப்பெண்கள் பெற வேண்டும். இதுவே எனது கடைசி ஆசை என அதில் எழுதியுள்ளார். இதுகுறித்து வழக்குபதிந்த போலீசார் ஆசிரியரை தற்கொலைக்கு தூண்டியதாக சிவசங்கர், அவரது மனைவி ஜெயா ஆகிய இரண்டு பேரையும் அதிரடியாக கைது செய்தனர்.