நீலகிரி மாவட்டத்தில் உள்ள மூர்த்தி கிராமத்தில் மோகன கிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சித்தாபுதூரில் இயங்கி வரும் ஆசீர்வாத் கூட்டுறவு உற்பத்தி நிறுவனம் மாதம் ஆயிரம் ரூபாய் வீதம் 5 ஆண்டுகள் 72 ஆயிரம் ரூபாய் செலுத்தினால் இறுதியாக 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் அசலுடன் சேர்த்து திருப்பி தரப்படும் என அறிவித்தது. இதனை நம்பி மோகனகிருஷ்ணன் 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் 2022-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 72 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டினார். சில தவணைகள் தாமதமாக கட்டியதற்காக அபராதமாக மோகன கிருஷ்ணனிடம் இருந்து 4,366 வசூலித்தனர்.

இந்நிலையில் திட்டம் நிறைவடைந்த பிறகும் அவருக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை. இதுகுறித்து மோகனகிருஷ்ணன் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சித்ரா மற்றும் உறுப்பினர் சசி ராஜா ஆகியோர் சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனம் மன உளைச்சல் ஏற்படுத்தியதற்காக 10 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை 5 ஆயிரம் ரூபாய், அந்த திட்டத்திற்கு உரிய தொகையான 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாயை இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் 18 சதவீத வட்டியுடன் கணக்கிட்டு வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர். மேலும் இரண்டு மாத காலத்திற்கு அந்த உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.