கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள செங்கம் புதூர் பகுதியில் ஆட்டோ டிரைவரான முத்துவேல் குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தேசிய மயமாக்கப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் தனது ஆட்டோவிற்கு இன்சூரன்ஸ் செய்து, அவருக்கும் தனி நபர் விபத்து காப்பீடு பாலிசி எடுத்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மணக்குடி அருகே நடந்த விபத்தில் முத்துவேல் இறந்துவிட்டார். இதனால் இழப்பீடு தொகையை தருமாறு முத்துவேலின் மனைவி விஜயா நாகர்கோவிலில் இருக்கும் சம்பந்தப்பட்ட இன்சூரன்ஸ் நிறுவனத்தில் விண்ணப்பித்துள்ளார்.

ஆனால் முறையான காரணம் கூறாமல் இன்சூரன்ஸ் நிறுவனத்தினர் இழப்பீடு தொகை வழங்க மறுப்பு தெரிவித்தனர். இதனால் விஜயா குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி இழப்பீடு தொகை 15 லட்ச ரூபாய், நஷ்ட ஈடு 15 ஆயிரம் ரூபாய், வழக்கு செலவு தொகை 5000 ரூபாய் ஆகியவற்றை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.