கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பணிக்கன் குடியிருப்பு பகுதியில் செல்வவேல் என்பவர் வசித்து வருகிறார். சம்பவம் நடைபெற்ற அன்று உடல் நலம் பாதிக்கப்பட்ட தனது குழந்தையுடன், செல்வவேல், அவரது மனைவி ஆகியோர் தாழக்குடியில் இருந்து நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையம் வரை செல்லும் அரசு பேருந்தில் பயணித்துள்ளார். அப்போது டிக்கெட் பரிசோதகர் வந்ததும் செல்வவேல் தான் எடுத்த 2 டிக்கெட்டுகளை கொடுத்துள்ளார். அப்போது பெண் குழந்தைக்கு ஏன் டிக்கெட் எடுக்கவில்லை என டிக்கெட் பரிசோதகர் கேட்டுள்ளார்.

அதற்கு குழந்தைக்கு 2 1/2 வயது தான் ஆகிறது என செல்வவேல் தெரிவித்துள்ளார். ஆனால் டிக்கெட் பரிசோதகர் குழந்தைக்கு மூன்று வயது இருக்கும் என கூறி 500 ரூபாய் அபராதம் செலுத்துமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இதனால் செல்வவேல் 500 ரூபாயை அபராதமாக செலுத்தி விட்டு முறையான ரசீது கேட்டுள்ளார். ஆனால் அந்த அதிகாரி உரிய பதில் எதுவும் தெரிவிக்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.  இதுகுறித்து நுகர்வோர் பாதுகாப்பு மையம் சார்பில் விளக்கம் கேட்டு அரசு போக்குவரத்து கழகத்திற்கு கடிதம் அனுப்பப்பட்டது.

அதன் பிறகும் உரிய பதில் கிடைக்காததால் செல்வவேல் குமரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கினை விசாரித்த குறைதீர் ஆணைய தலைவர் சுரேஷ், உறுப்பினர் சங்கர் ஆகியோர் அரசு போக்குவரத்து கழகத்தின் சேவை குறைபாட்டை சுட்டிக்காட்டி நஷ்ட ஈடாக 10,000 ரூபாய் பணம், வழக்கு செலவு தொகை 2000 ரூபாய், அபராத தொகை 500 ரூபாய் ஆகியவற்றை ஒரு மாத காலத்திற்குள் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்தனர்.