வேலூர் மாவட்டத்தை அடுத்த பெருமுகையில் சென்னை-பெங்களூரு தேசியநெடுஞ்சாலையை கடக்கும் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு, அதில் மக்கள் சிக்கி உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. மேலும் அங்குள்ள அரசுப்பள்ளியில் படிக்கும் மாணவர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் ஆபத்தான முறையில் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்லும் நிலைமையால், தேசிய நெடுஞ்சாலையின் குறுக்கே மேம்பாலம் அமைக்க வேண்டும் என மக்களின் தொடர்கோரிக்கையாக இருந்தது.

அதன்படி தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பாக ரூ.15 கோடி மதிப்பீட்டில், மேம்பாலம் அமைக்க நிதி ஒதுக்கி, கடந்த மாதம் பிப் 22-ந் தேதி முதல் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் பெங்களூரு-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு வாகனங்கள் அனைத்தும் சர்வீஸ் சாலைக்கு திருப்பி விடப்பட்டும்,  மேம்பாலத்திற்கான தூண்கள் அமைப்பதற்கு பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டப்பட்டும் தொடர்ந்து பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இந்த பணிகளை மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் நேற்று நேரில் சென்று  பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இந்த ஆய்வின்போது நெடுஞ்சாலைத்துறை திட்ட பொறியாளர் ஜெயக்குமார், வேலூர் தாசில்தார் செந்தில் மற்றும் பலர் அவரோடு உடன் இருந்தார்கள்.