தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் போட்டியிடும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேற்று பெரம்பூரில் தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பெரம்பூர் மற்றும் கொளத்தூர் பகுதிகளில் அவர் தனது முதல் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கினார்.
விஜய்யைக் காண்பதற்காகவும் அவரது உரையைச் செவிமடுக்கவும் வழிநெடுகிலும் ஆண்களும் பெண்களும் எனப் பெருந்திரளான மக்கள் கூடியிருந்தனர். கட்டுக்கடங்காத மக்கள் கூட்டத்தின் காரணமாக அந்தப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதுடன் பாதுகாப்பு கருதி விஜய்யின் பிரச்சார வாகனம் மக்கள் கூட்டத்திலிருந்து சுமார் ஐந்நூறு மீட்டர் தொலைவில் நிறுத்தப்பட்டது.
இந்த நிலையில் கொளத்தூர் பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தின்போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாகத் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது பெரவள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரச்சாரத்திற்காக ஐந்து ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்த மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருந்த நிலையில் அந்த உறுதிமொழியை மீறி முப்பது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தியதாகத் தேர்தல் அதிகாரி புகார் அளித்துள்ளார்.
மேலும் ஐந்து ஆயிரத்திற்கும் அதிகமான பொதுமக்களைத் திரட்டியது மற்றும் பிரச்சாரத்தின்போது அவசரச் சிகிச்சை ஊர்தி செல்வதற்கான பாதையை மறைத்து இடையூறு ஏற்படுத்தியது உள்ளிட்ட புகார்களின் அடிப்படையில் ஐந்து பிரிவுகளின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கொளத்தூர் தொகுதியில் நடைபெற்ற விஜய்யின் பிரச்சாரத்தின் போது உண்மையில் நடந்தது என்ன என்பது குறித்துச் சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரியிடம் தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் கேட்டுள்ளார். மேலும் எந்தச் சூழலில் இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டது என்பது தொடர்பாகக் காவல்துறை தலைமை இயக்குநரிடமும் விளக்கம் கேட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரச்சாரத்தின் போது போதிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் காவல்துறையினர் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்வதாகவும் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்த சூழலில் இந்த விளக்கங்கள் கோரப்பட்டுள்ளன.
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீதான இந்த வழக்குப் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் ஆணையம் கேட்டுள்ள விளக்கங்களுக்குச் சென்னை மாவட்டத் தேர்தல் அதிகாரி மற்றும் காவல்துறை தரப்பில் அளிக்கப்படும் பதிலைப் பொறுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகள் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரச்சாரத்தின் போது ஏற்பட்ட நெரிசல் மற்றும் விதிமீறல் புகார்கள் தொடர்பான விரிவான அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படும் என்று தெரிகிறது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சென்னையில் உள்ள மற்ற தொகுதிகளிலும் தேர்தல் பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் குறித்த கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
