இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. ஆமதாபாத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், தமிழகத்தைச் சேர்ந்த சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 4 விக்கெட்டுகளைச் சாய்த்து இந்திய அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தார்.

மைதானத்தில் இந்திய அணியின் அதிரடி ஆட்டம் ஒருபுறம் இருக்க, விக்கெட் கீப்பர் சஞ்சு சாம்சன் மற்றும் வருண் சக்ரவர்த்தி இடையே நடந்த சுவாரஸ்யமான ‘தமிழ்’ உரையாடல் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.

வருண் சக்ரவர்த்தி பந்துவீசிக் கொண்டிருந்தபோது, விக்கெட் கீப்பிங் செய்த சஞ்சு சாம்சன் அவரை தமிழில் உற்சாகப்படுத்தினார். ஸ்டம்ப் மைக்கில் பதிவான அந்த உரையாடலில், “வா மச்சி.. வா மச்சி.. விக்கெட்டை எடு.. நல்லாதான் போட்ற!” என சஞ்சு சாம்சன் தூய தமிழில் பேசியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

கேரளாக்காரரான சஞ்சு, பக்கத்து மாநிலமான தமிழ்நாட்டின் மொழியை இவ்வளவு அழகாகப் பேசி, தமிழக வீரர் வருணை ஊக்கப்படுத்தியது அனைவரது பாராட்டுகளையும் பெற்றுள்ளது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் வெளியிட்ட இந்த வீடியோவை “நம்ம ஊரு சஞ்சு” எனத் தமிழக ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர்.