தமிழகத்தில் கள ஆய்வின் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி அனைத்து மாவட்டங்களிலும் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் முதல் கட்டமாக கடந்த பிப்ரவரி 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் கள ஆய்வை மேற்கொண்டார். அந்த ஆய்வு பணிகளின் போது மாவட்டங்களில் நடக்கும் நிர்வாக பணி, வளர்ச்சி மற்றும் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் அரசு திட்டங்கள் குறித்து முதல்வர் ஆய்வு செய்தார்.

அது மட்டுமல்லாமல் விவசாய சங்க பிரதிநிதிகள்,சுய உதவி குழுக்கள் மற்றும் தொழில் அமைப்புகளின் கருத்துக்களையும் கோரிக்கைகளையும் முதல்வர் கேட்டறிந்தார். இந்நிலையில் திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை,தேனி ஆகிய ஐந்து மாவட்டங்களில் கள ஆய்வுக்காக முதல்வர் ஸ்டாலின் மதுரைக்கு வருகின்ற மார்ச் 5ஆம் தேதி செல்கிறார். இந்த ஐந்து மாவட்டங்களுக்கான கள ஆய்வை மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் மதுரையில் இருந்து அவர் மேற்கொள்ள உள்ளார்.