சென்னையில் உள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு வரும் பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதன்படி சென்னையில் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் பயணிகளின் பைகளை சோதனை செய்து அனுப்பும் ‘செக்-இன்’ என்ற புதிய வசதி அமைக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்த வசதியானது தேர்ந்தெடுக்கப்பட்ட சில மெட்ரோ நிலையங்களில் மட்டும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்நிலையில் இந்த வசதியினை மேற்கொள்வதற்கான சாத்திய கூறுகளை குறித்து பேசுவதற்காக விமான நிலைய இயக்குனர் சரத்குமார் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மெட்ரோ ரெயில் அதிகாரிகள், விமான நிறுவன அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த புதிய வசதி மூலம் விமானம் புறப்படுவதற்கு முன், பயணிகளின் கூட்ட நெரிசலை குறைக்கவும் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மற்றும் பயணிகளின் சுமைகளை குறைக்கவும் உதவும். இதனையடுத்து இப்புதிய நடைமுறை வசதி மார்ச் மாதம் முதல் சோதனை முறையாக அமல்படுத்தப்படும். இதன் பின் ஏப்ரல் 14 முதல் மெட்ரோ ரெயில் நிலையங்களில் விமான பயணிகளுக்காக முழுமையாக செயல்படுத்தபடும். எந்தெந்த மெட்ரோ ரெயில் நிலையங்களில் இந்த வசதி உள்ளது என்பது பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். மேலும் ஆன்லைன் முன்பதிவு மூலம்  இணையதளத்தில் இந்த புதிய வசதியினை சேர்க்கவும்  இக்கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.