சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள கங்கா நகர் பகுதியில் வசிப்பவர் சமீர் அலி. இவருக்கு ஓட்டேரி சுப்புராயன் தெருவில் சொந்தமாக 14 வீடுகள் உள்ளது. அதில் ஒரு வீட்டில் சங்கர்(45) என்பவர் வசித்து வருகிறார். இவரை “ஜல்லிக்கட்டு சங்கர்” என்று  அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அழைப்பார்கள். ஏனெனில் இவர் “ஜல்லிக்கட்டு” என்ற பெயரில் டிபன் கடை ஒன்று நடத்தி வருகிறார். இந்நிலையில் சங்கர் 14 வீடுகளின் வாடகை பணத்தை வசூலித்து அதை மொத்தமாக சமீர் அலியிடம் ஒப்படைப்பார். ஆனால் கடந்த சில மாதங்களாக சமீர் அலிக்கு வாடகை பணத்தை கொடுக்காமல் சங்கர் ஏமாற்றி வந்துள்ளார்.

ஆகவே இது பற்றி சமீர் அலி நேரில் சென்று தனது வீட்டில் குடியிருக்கும் வாடகைதாரர்களிடம் விசாரித்துள்ளார். அப்போது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. அதாவது சங்கர், சமீர் அலியின் வீடுகளை வாடகைக்கு விடாமல் சில நபர்களுக்கு குத்தகைக்கு விட்டு ,25 லட்ச ரூபாய் வரை மோசடி செய்திருப்பது தெரியவந்தது. உடனே சமீர் அலி கடந்த 2020-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் சங்கர் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்துள்ளனர். அந்த விசாரணையில் சங்கர் வாடகைதாரர்களை மட்டும் ஏமாற்றவில்லை என்றும் அந்த பகுதியில் உள்ள மற்றவர்களிடமும் பல லட்சம் ரூபாய் வரை மோசடி செய்ததும்  தெரியவந்தது. இதனையடுத்து சங்கரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர்.