திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் கடந்த சில நாட்களாக பகல் நேரங்களில் கடுமையான வெப்பமும், இரவு நேரங்களில் குளிரும் நிலவி வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கொடைக்கானல் பெரும்பள்ளம் வனச்சரகத்திற்கு உட்பட்ட வடகவுஞ்சி அருகே தனியார் பட்டா நிலங்களில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனையடுத்து தீ வேகமாக பரவி விலை உயர்ந்த மரங்கள் தீயில் கருகி புகை மண்டலமாக காட்சி அளித்தது.

இதுகுறித்து அறிந்த வனசரகர் குமரேசன் தலைமையிலான வனக்குழுவினர் அங்கு விரைந்து சென்று பல மணிநேரம் போராட்டத்திற்கு பிறகு நள்ளிரவு நேரத்தில் தீயை முற்றிலுமாக அணைத்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது, தனியார் தோட்டங்களில் தீ வைப்பதற்கு வனத்துறையினரிடம் அனுமதி வாங்க வேண்டும். ஆனால் சிலர் அனுமதி பெறாமல் தீ வைத்து விடுகின்றனர். எனவே அனுமதி பெறாத தோட்ட உரிமையாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.