உணவகங்களில் விதவிதமான பெயர்களில் உணவுகளைப் பார்ப்பது வழக்கம் என்றாலும் ஒரு நபர் ஆர்டர் செய்த உணவு சமூக வலைதளங்களில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நபர் உணவகத்தின் மெனு கார்டில் செஃப் கிஸ் என்ற பெயரில் இருந்த உணவை மிகுந்த ஆர்வத்துடன் ஆர்டர் செய்துள்ளார்.

சுமார் 725 ரூபாய் மதிப்புள்ள அந்த உணவைச் சுவைக்க அவர் காத்திருந்த நிலையில் மேசைக்கு வந்த தட்டைக் கண்டு அவர் அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்தத் தட்டின் நடுவே இளஞ்சிவப்பு நிறத்தில் பெரிய மனித உதடுகள் போன்ற வடிவில் ஒரு இனிப்பு வகை வைக்கப்பட்டிருந்தது.

சமையல் கலைஞரின் கைவண்ணத்தைப் பாராட்டும் விதமாகச் சொல்லப்படும் ஒரு சொற்றொடரை அந்த உணவகம் அப்படியே தத்ரூபமாக உணவாக மாற்றியிருந்தது அங்கிருந்தவர்களை வியப்பில் ஆழ்த்தியது.

உண்மையில் இது சிவப்பு பெர்ரி பழங்கள் மற்றும் சாக்லேட் கொண்டு செய்யப்பட்ட ஒரு இனிப்பு வகையாகும். மனித உதடுகளின் வடிவத்திலேயே அந்த இனிப்பு வடிவமைக்கப்பட்டிருந்ததால் அந்த நபர் அதனைச் சாப்பிடும்போது எடுத்த வீடியோ இணையத்தில் தீயாய்ப் பரவி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Darshna & Rishav (@flexinggoat)

இன்றைய காலக்கட்டத்தில் உணவகங்கள் வெறும் சுவையை மட்டும் வழங்காமல் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் விசித்திரமான பெயர்களிலும் வினோதமான வடிவங்களிலும் உணவுகளை வழங்கி வருகின்றன என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் அந்தச் சமையல் கலைஞர் உணர்ச்சிகளை அதிகமாக வெளிப்படுத்தி விட்டார் என்றும் இதனைச் சாப்பிட்டுவிட்டு எப்படி வீட்டிற்குச் செல்வீர்கள் என்றும் நகைச்சுவையாகக் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.