உத்தரப்பிரதேச மாநிலம் கவுஷாம்பி மாவட்டத்தில், வருங்கால கணவருடன் அடிக்கடி செல்போனில் பேசியதைக் கண்டித்த தாயின் செயலால் மனமுடைந்த இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் 18 வயதான லட்சுமி என்ற அந்தப் பெண்ணிற்கு, வருகிற நவம்பர் மாதம் திருமணம் நடத்த அவரது தந்தை முன்னா சரோஜ் நிச்சயித்திருந்தார். திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில், லட்சுமி தனது வருங்கால கணவருடன் நீண்ட நேரம் செல்போனில் பேசி வந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால் இதை கவனித்த அவரது தாய், திருமணத்திற்கு முன்பே இப்படி அதிக நேரம் பேசுவது சரியாக இருக்காது என்று கூறி மகளைக் கண்டித்துள்ளார். தாயின் கண்டிப்பால் ஆத்திரமும் மனவேதனையும் அடைந்த லட்சுமி, யாரும் இல்லாத நேரத்தில் தனது அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

இந்நிலையில் மகளின் இந்த விபரீத முடிவைக் கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்போன் பயன்பாடு தொடர்பான சிறு கண்டிப்பு ஒரு உயிரைப் பறித்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.