சிங்கப்பூரில் ஆன்லைன் மோசடி (Scam) குற்றங்கள் மற்றும் அதன் மூலம் ஏற்படும் நிதி இழப்புகள் சாதனை அளவில் உயர்ந்துள்ள நிலையில், மோசடி கும்பல்களை ஒடுக்க அரசாங்கம் கடுமையான நடவடிக்கையை எடுத்துள்ளது. ஸ்கேமர்களுக்கு (scammers) குறைந்தபட்சம் ஆறு பிரம்படிகள் கட்டாயம் என தண்டனை விதிக்கப்படும் என்று சிங்கப்பூர் உள்துறை அமைச்சகத்தின் மூத்த இணை அமைச்சர் சிம் அன் (Sim Ann) நாடாளுமன்றத்தில் அதிரடியாக அறிவித்துள்ளார்.

2020ஆம் ஆண்டு முதல் 2025ஆம் ஆண்டின் முதல் பாதி வரை, தென்கிழக்கு ஆசியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சிங்கப்பூர், மோசடிகள் மூலம் 2.8 பில்லியன் டாலருக்கும் அதிகமாக இழப்பைக் கண்டுள்ளது. இந்த காலகட்டத்தில் சுமார் 1.9 லட்சம் மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன.

மோசடிகளைத் தடுக்க அரசாங்கம் ஏற்கெனவே தேசிய ஹாட்லைன், ‘ஸ்கேம்ஷீல்ட்’ (ScamShield) செயலி உள்ளிட்ட பொதுக் கல்வி முயற்சிகளைத் தீவிரப்படுத்தியுள்ள நிலையிலும், தண்டனையை தீவிரப்படுத்த இந்த புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது.

இந்தச் சட்டத் திருத்தத்தின்படி, ரிமோட் கம்யூனிகேஷன் மூலம் மோசடிகளில் ஈடுபடும் நபர்களுக்கு குறைந்தபட்சம் 6 பிரம்படிகள் தண்டனையாக விதிக்கப்படும். குறிப்பாக, இந்த மோசடிக் கும்பல்களை அமைத்து நிதி ஆதாயம் ஈட்டுபவர்களுக்கும், அவர்களை ஆள் சேர்ப்பவர்களுக்கும் இந்த 6 பிரம்படி தண்டனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

மேலும், மோசடிக்காரர்களுக்கு உதவி செய்யும் ‘மணி மியூல்கள்’ (Money Mules) எனப்படும், தங்கள் வங்கிக் கணக்குகள் அல்லது சிம் கார்டுகளை மோசடிக்காக அளிப்பவர்களுக்கும் 12 பிரம்படிகள் வரை தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

இந்த கடுமையான நடவடிக்கை மூலம் ஆசியா முழுவதும் பெருகி வரும் ‘சைபர் ஸ்கேம் ஹப்’ (Cyberscam hubs) எனப்படும் மோசடிக் கூடாரங்களுக்கு ஒரு கடும் எச்சரிக்கையை சிங்கப்பூர் விடுத்துள்ளது. இது சிங்கப்பூரின் கிரிமினல் சட்ட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகப் பார்க்கப்படுகிறது.