தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில், அதிமுகவின் ‘வியூக வகுப்பாளர்கள்’ தயாரித்ததாகக் கூறப்படும் தொகுதிப் பங்கீடு பட்டியல் அரசியல் வட்டாரத்தில் தீயாய் பரவி வருகிறது.
அந்தப் பட்டியலில் அதிமுகவுக்கு 170 இடங்கள் ஒதுக்கப்பட்டு, பாஜக மற்றும் பாமகவுக்கு தலா 23 இடங்களும், தேமுதிக மற்றும் டிடிவி தினகரனுக்கு தலா 6 இடங்களும், ஓபிஎஸ் அணிக்கு வெறும் 3 இடங்களும் மட்டுமே ஒதுக்கப்பட்டதாகத் தகவல் வெளியானது.
இதைப்பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிகவுக்கு வெறும் 6 இடங்கள் எனத் தகவல் வெளியிட்ட கட்சிக்கு அழிவுகாலம் தொடங்கிவிட்டது” என ஆவேசமாகச் சாடியுள்ளார். கூட்டணி குறித்து ஜனவரியில்தான் முடிவெடுப்போம் என்றும் அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்றால் மட்டுமே தொகுதிகள் ஒதுக்கப்படும் என்ற நிபந்தனையால் டிடிவி தினகரன் மற்றும் ஓபிஎஸ் தரப்பு கடும் கொந்தளிப்பில் உள்ளது.
“எடப்பாடியை முதல்வராகவே ஏற்காத நாங்கள் எப்படி அவரோடு கூட்டணி வைப்போம்?” என டிடிவி தினகரன் அதிரடியாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதேபோல், ஓபிஎஸ் தரப்பு நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் ஈபிஎஸ் தலைமையை ஏற்கக் கூடாது என முடிவெடுக்கப்பட்டதுடன், பல ஆதரவாளர்கள் விஜய்யின் ‘தவெக’ உடன் இணைய வேண்டும் என வலியுறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே, பாமகவும் திமுக பக்கம் சாய வாய்ப்புள்ளதாகக் கூறப்படுவதால், எடப்பாடியின் இந்தத் தொகுதிப் பங்கீடு வியூகம் அவருக்கே எதிராகத் திரும்பியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
