திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த த.வெ.க. நிர்வாகி சத்தியநாராயணன் என்பவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து வைக்கப்பட்ட பேனரில், த.வெ.க. பூண்டி ஒன்றிய செயலாளரின் புகைப்படம் இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது. இதற்காக சத்தியநாராயணனைத் தொடர்பு கொண்ட சிலர், அவரைக் கடுமையாக மிரட்டியதாகத் தெரிகிறது. இந்த மன உளைச்சலில் அவர் இத்தகைய விபரீத முடிவை எடுத்துள்ளார். தற்போது அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

​ஏற்கனவே கட்சியின் மற்றொரு முக்கிய நிர்வாகியான அஜிதா ஆக்னஸ் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மற்றொரு நிர்வாகியின் இந்தத் தற்கொலை முயற்சி கட்சித் தலைமைக்கு வருத்தத்தை அளித்துள்ளது. தனது கட்சியின் நிர்வாகிகள் அடுத்தடுத்து இத்தகைய இன்னல்களைச் சந்தித்து வருவது அக்கட்சியின் தலைவர் விஜயை மிகுந்த அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. உட்கட்சிப் பூசல்கள் மற்றும் மிரட்டல் கலாச்சாரம் தொண்டர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.