வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை மையமாக வைத்து, அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக அறிவித்துள்ளார்.

இந்தக் குழுவில் நத்தம் விசுவநாதன், பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன், ஜெயக்குமார், சி.வி.சண்முகம், செம்மலை, வளர்மதி, ஓ.எஸ்.மணி, ஆர்.பி.உதயகுமார் மற்றும் வைகைச் செல்வன் என மொத்தம் 10 மூத்த நிர்வாகிகள் இடம்பெற்றுள்ளனர்.

அதிமுக ஆட்சிக்கு வந்தால் என்னென்ன திட்டங்கள் கொண்டு வரப்படும் என்பதை இப்போதே திட்டமிட இந்தக் குழுவிற்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

வெறுமனே அறையில் அமர்ந்து தேர்தல் அறிக்கையைத் தயாரிக்காமல், பல தரப்பட்ட மக்களின் குறைகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்து ‘மக்களுக்கான அறிக்கையாக’ இதனைத் தயார் செய்ய இபிஎஸ் உத்தரவிட்டுள்ளார்.

இதற்காக இந்தக் குழுவினர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள், தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களிடம் கருத்துக்களைக் கேட்க உள்ளனர்.

இந்தக் குழுவின் சுற்றுப்பயண விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்று தலைமை அறிவித்துள்ளது. தேர்தலுக்கு முன்பே தேர்தல் அறிக்கை குழுவை அமைத்து, அதிமுக தனது தேர்தல் வேலையைத் தற்போதே சூடுபிடிக்க வைத்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.