கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள மிளகுமூடு பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் ராஜா(25) என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் ராஜா தனது நண்பர் பெனின்ஸ்(32) என்பவருடன் இணைந்து ஆன்லைன் மூலம் வங்கி கடன் வாங்கி கொடுப்பது உள்ளிட்ட பல்வேறு வேலைகளை செய்து வந்துள்ளார். நேற்று முன்தினம் இரவு அஸ்வின் ராஜாவும், பெனின்சும் ஹோட்டலில் சாப்பிடுவதற்காக சாமியார் மடம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றனர்.

அவர்கள் காட்டுவிளை பகுதியில் சென்ற போது எதிரே வந்த கேரளா அரசு பேருந்து மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அஸ்வின் ராஜாவை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளார். பெனின்சுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.