கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கல்லுதொட்டி பகுதியில் ரகுபதி என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் வெர்ஜின் ஜோஸ்வா(24) மார்த்தாண்டத்தில் இருக்கும் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துள்ளார். அப்போது ஜோசாவுக்கும் அதே கல்லூரியில் படித்த ஒரு மாணவிக்கும் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இருவரும் கல்லூரி நாட்களில் சந்தோஷமாக இருந்துள்ளனர்.

இதனையடுத்து அந்த மாணவி மார்த்தாண்டம் அருகே இருக்கும் ஒரு கல்லூரியில் பி.எட் படித்தார். ஆனால் ஜோஸ்வா மேற்படிப்பு படிக்கவில்லை. இதனையடுத்து மாணவி ஜோஸ்வாவை சந்திப்பதை தவிர்த்து விட்டார். இதனால் ஜோஸ்வா தனது காதலியை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தி உள்ளார்.

அதற்கு மாணவி சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும் அவர் ஜோசவுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் ஜோஸ்வா கோபத்தில் இருந்தார். அதே சமயம் மாணவி ஜோஸ்வாவை செல்போனில் தொடர்பு கொண்டு எனது மடிக்கணினி உன்னிடம் இருக்கிறது, அதை என்னிடம் தா என கூறி மார்த்தாண்டம் பேருந்து நிலையம் பகுதிக்கு வருமாறு அழைத்துள்ளார்.

அதன்படி நேற்று ஜோஸ்வா மடிக்கணினியை கொடுப்பதற்கு சென்றுள்ளார். அங்கு வைத்து ஜோஸ்வா உன்னுடன் சிறிது நேரம் கடைசியாக பேச வேண்டும், தயவு செய்து என்னுடன் ஸ்கூட்டரில் வா என கெஞ்சி மாணவியை அழைத்து சென்றுள்ளார். இதனை தொடர்ந்து உதியனூர்குளம் சாலை பகுதியில் இருக்கும் பள்ளிக்கூடம் அருகே ஸ்கூட்டரை நிறுத்தி ஜோஸ்வா தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் மாணவியை சரமாரியாக வெட்டியுள்ளார்.

பின்னர் அரிவாளை கீழே போட்டுவிட்டு சிறிது தூரம் ஓடி சென்று ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே படுகாயமடைந்த மாணவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொடூர சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.