கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம், தும்போலியைச் சேர்ந்த தனியார் பள்ளி ஆசிரியை ஆவணிக்கும் (25), பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் ஷாரோனுக்கும் (32) நேற்று ஆலப்புழாவில் உள்ள ஒரு மண்டபத்தில் திருமணம் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக மணமகள் ஆவணி, ஒப்பனை செய்துகொள்வதற்காகத் தனது அத்தையுடன் கார் மூலம் அருகே இருந்த அழகு நிலையத்துக்குச் சென்றுள்ளார்.

ஆவணியே காரை ஓட்டிச் சென்ற நிலையில், செல்லும் வழியில் எதிர்பாராதவிதமாக கார் மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஆவணி மற்றும் அவரது அத்தை இருவரும் படுகாயம் அடைந்து, எர்ணாகுளம் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதனால், குறிப்பிட்ட நேரத்தில் மண்டபத்தில் நடைபெற வேண்டிய திருமணம் தடைப்பட்டது.

விபத்து காரணமாக மணமகள் ஆவணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதை அறிந்த மணமகன் பேராசிரியர் ஷாரோன், தாமதிக்காமல் அங்கிருந்தே மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு, படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வந்த மணமகள் ஆவணிக்குக் காதலையும் தைரியத்தையும் வெளிப்படுத்தும் விதமாக தாலி கட்டினார்.

விபத்தால் திருமணம் தடைபட்ட நிலையிலும், மருத்துவமனையிலேயே இருவரும் திருமணம் செய்துகொண்ட இந்தச் செயல் அங்கிருந்த உறவினர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. மணமக்களுக்காக மண்டபத்துக்கு வந்தவர்களுக்கு, அங்கு இருந்தவர்கள் விருந்து உபசரிப்பு அளித்து மகிழ்வித்தனர். விபத்தால் தடைபட்ட திருமணத்தை மருத்துவமனைக்குச் சென்று நடத்தி முடித்த இந்தச் சம்பவம் மனிதநேயத்தின் மகத்துவத்தை உணர்த்துவதாக அமைந்தது.