பெங்களூரு சவுத் எண்ட் சர்க்கிள் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்குப் பணம் நிரப்பச் சென்ற HDFC வங்கி கிளையைச் சேர்ந்த வேனை, பட்டப்பகலில் ஒரு டொயோட்டா இன்னோவா கார் வழிமறித்து நிறுத்தி ரூ.7.11 கோடி கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரிசர்வ் வங்கியைச் சேர்ந்தவர்கள் என்று கூறி வங்கி ஊழியர்களை அணுகிய 7 பேர் கொண்ட அந்தக் கும்பல், பணத்தை வலுக்கட்டாயமாகத் தங்கள் காருக்கு மாற்றிய பின்னர், ஊழியர்களை வேறு இடத்தில் இறக்கிவிட்டுத் தப்பிச் சென்றது.
இதனையடுத்து, காவல்துறையினர் அமைத்த சிறப்புப் படையினர், 60 மணி நேரத் தேடுதல் வேட்டைக்குப் பின்னர் 3 பேரைக் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் கோவிந்தபுரா காவல் நிலைய காவலர் மற்றும் பணம் நிரப்பும் நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஆகியோரும் அடங்குவர். அவர்களிடம் இருந்து ரூ.5.76 கோடி பணத்தைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
