முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன், ‘மன்னிப்புக் கேட்டால் சசிகலா, ஓ.பி.எஸ். போன்றோரை அ.தி.மு.க.வில் மீண்டும் சேர்ப்பது குறித்துத் தலைமைப் பேச்சுவார்த்தை நடத்தும்’ என்று தெரிவித்திருப்பது, அரசியல் வட்டாரத்தில் புதிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள், சசிகலா, டி.டி.வி. தினகரன், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் செங்கோட்டையன் ஆகியோரைத் ‘துரோகிகள்’ என்று பகிரங்கமாகக் குற்றம் சாட்டி வரும் நிலையில், ஓ.எஸ். மணியனின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.

இந்தச் சூழலில், ஓ.எஸ். மணியனின் பேச்சு அவரது தனிப்பட்ட கருத்தா? அல்லது அ.தி.மு.க.வை மீண்டும் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற எண்ணத்திற்குப் பெரும்பாலான நிர்வாகிகள் வந்துவிட்டனரா? என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது. கட்சியின் முக்கிய தலைவர்கள் ஒருபுறம் எதிர்ப்பை வெளிப்படுத்தி வரும் நிலையில், இன்னொரு முன்னாள் அமைச்சர் இவ்வாறு சமரசப் பேச்சுக்கு வழி வகுப்பது, அ.தி.மு.க.வில் ஒற்றுமைக்கான முயற்சிகள் திரைமறைவில் நடக்கிறதா என்ற ஐயத்தையும், அரசியல் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அ.தி.மு.க. தலைமையின் அடுத்தகட்டப் பதில் என்னவாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் உற்று நோக்கி வருகின்றனர்.