அதிமுக முன்னாள் அமைச்சரும், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் உயர் மட்டக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளருமான கே.ஏ. செங்கோட்டையன், அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் அக்கட்சியில் இணைவார்கள் என்று தொடர்ந்து கூறி வந்த நிலையில், பொள்ளாச்சி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி. கிருஷ்ணன் முறைப்படி அக்கட்சியில் இணைந்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் விரைவில் தவெகவில் இணைய உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் அதிமுக தலைமைக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழக அரசியலில் இந்த நகர்வு உற்று நோக்கப்படுகிறது.
இதனிடையே கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த செங்கோட்டையனிடம், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் தவெகவில் இணைவார்களா அல்லது கூட்டணி வைப்பார்களா என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், இருவருடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவது உண்மைதான் என்றும், பொங்கல் பண்டிகைக்குப் பிறகு அவர்கள் மிக முக்கியமான முடிவை அறிவிப்பார்கள் என்றும் குறிப்பிட்டார்.
ஓ. பன்னீர்செல்வம் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவில் ஒருபோதும் இணையப் போவதில்லை என்பதில் உறுதியாக இருப்பதாகவும், அதனால் அவர் விரைவில் நல்ல முடிவை எடுப்பார் என்றும் செங்கோட்டையன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
