தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகளுக்கிடையே கட்சித் தாவல் படலங்கள் சூடுபிடித்துள்ளன. இதன் ஒரு பகுதியாக, சென்னை வேளச்சேரி மேற்குப் பகுதி திமுக செயலாளர் அரிமா சேகர், அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் இன்று தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

அவருடன் திமுக பிரமுகர் கராத்தே எம்பி சுதர்சன், வேளச்சேரி பகுதி இலக்கிய அணி செயலாளர் சேகர் மற்றும் பகுதி துணை அமைப்பாளர் விநாயகம் ஆகியோரும் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர். தேர்தல் களத்தில் வெற்றி வாய்ப்பை உறுதி செய்ய மாற்றுக் கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்கும் பணியில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு முக்கியக் கட்சிகளும் தீவிரமாகப் போட்டி போட்டு ஈடுபட்டு வரும் நிலையில், சென்னையில் திமுக நிர்வாகிகளின் இந்த இடமாற்றம் அரசியல் வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.