கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன் மீது, பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம், மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

எர்ணாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த அந்த பெண் மருத்துவர், திருக்காக்கரா காவல் நிலையத்தில் சமீபத்தில் அளித்த புகாரில் கூறியதாவது:

“சமூக வலைதளத்தின் வாயிலாகவே எங்கள் நட்பு தொடங்கியது. பின்னர் அது காதலாக மாறியது. திருமணம் செய்வதாக வேடன் வாக்குறுதி அளித்து, கோழிக்கோட்டில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் என்னை அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

அதனைத் தொடர்ந்து, 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று, ஆசை வார்த்தைகளில் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்தார். பின்னர் திருமணம் செய்வதைத் தவிர்த்து விட்டார். எனக்கு ஏற்பட்ட இந்த அநீதியைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் புகார் அளிக்க நேரிட்டது,” என கூறப்பட்டிருந்தது.

புகாரின் அடிப்படையில் திருக்காக்கரா காவல் துறை, வேடன் மீது பாலியல் வன்கொடுமை, திருமண வாக்குறுதியின் பெயரில் தவறாக பயன்படுத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தது.

இதையடுத்து அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், வேடன் வெளிநாடு தப்பி செல்லாமல் இருக்க திருக்காக்கரா துணை காவல் ஆணையர் (DCP) உத்தரவின் பேரில், லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது.

மேலும், முன் ஜாமீன் கோரி வேடன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு வரும் ஆகஸ்ட் 18ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாக தெரிகிறது.