தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட எட்டையாபுரம், அயன்கரிசல்குளம் மற்றும் வெம்பூர் புதூர் ஆகிய பகுதிகளில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அதிமுக சார்பில் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டார்.

அப்போது அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அடங்கிய துண்டுப் பிரசுரங்களை பொதுமக்களிடம் வழங்கி அவர் ஆதரவு திரட்டினார். பிரச்சாரத்தின் போது பேசிய அவர், தற்போதைய திமுக ஆட்சியில் விவசாயிகளுக்கு முறையான பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

இந்த அரசு விவசாயிகளின் நலனில் அக்கறையற்ற ஒரு துப்புகெட்ட ஆட்சியாக நடைபெற்று வருவதாகவும் அவர் கடுமையாக விமர்சித்தார். நாட்டில் என்ன நடக்கிறது என்பது கூடத் தெரியாத நிலையில் முதலமைச்சர் உள்ளார் என்று சாடிய கடம்பூர் ராஜு, மக்களுக்கான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் இந்த அரசு தோல்வியடைந்து விட்டதாகக் குறிப்பிட்டார்.

மேலும், தேர்தல் களத்தில் புதிதாக ஒலிக்கும் விசில் சின்னம் குறித்து நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், அதிமுகவின் வெற்றி உறுதியானது என்றும் அவர் தனது தொண்டர்களிடையே உற்சாகமாகத் தெரிவித்தார். விவசாயிகளின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் திட்டங்களை அதிமுக மீண்டும் கொண்டு வரும் என அவர் உறுதி அளித்தார்.