தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனது அரசியல் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாதது அவரது ஆதரவாளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் ஓ. பன்னீர்செல்வம் இன்று தனது ஆதரவாளர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

அப்போது, கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகள் மற்றும் தேர்தல் கூட்டணி குறித்து நிர்வாகிகளின் கருத்துகளைக் கேட்டறிந்த அவர், விருப்பமுள்ளவர்கள் தங்களது கருத்துகளை எழுத்துப்பூர்வமாகத் தாக்கல் செய்யலாம் என்று கேட்டுக்கொண்டார்.

இதற்கு அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் கூட்டத்தில் திடீர் பரபரப்பு நிலவியது. கூட்டணி மற்றும் கட்சி விவகாரங்கள் குறித்துக் கடிதம் மூலமாகத் தெரிவிப்பதைக் காட்டிலும், நேரடியாகப் பேசவே தாங்கள் விரும்புவதாகக் கூறி நிர்வாகிகள் ஓ. பன்னீர்செல்வத்துடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆலோசனை கூட்டத்தில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

நிர்வாகிகளின் இந்த எதிர்ப்பைத் தொடர்ந்து, அவர்களின் கருத்துகளை நேரடியாகக் கேட்டுப் பெற்று, கூட்டணி குறித்த இறுதி முடிவை விரைவில் அறிவிப்பதாக ஓ. பன்னீர்செல்வம் உறுதி அளித்துள்ளார்.