கடந்த 2020-ஆம் ஆண்டு பாகிஸ்தானில் பெரும் போராட்ட வெடிப்பை ஏற்படுத்திய ‘லாகூர் மோட்டார்வே கூட்டு பாலியல் வன்கொடுமை’ வழக்கின் முக்கிய குற்றவாளிகளான ஆபித் அலி மற்றும் ஷஃப்கத் அலி ஆகிய இருவரின் தூக்கு தண்டனையை லாகூர் உயர் நீதிமன்றம் அதிரடியாக உறுதி செய்துள்ளது. கடந்த 2020 செப்டம்பர் 9 அன்று, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தனது மூன்று குழந்தைகளுடன் காரில் சென்றபோது, நடுவழியில் பெட்ரோல் தீர்ந்து கார் நின்றுள்ளது.
அப்போது அங்கு வந்த இந்த இரு கொடூரர்கள், காரின் கண்ணாடியை உடைத்து அந்தப் பெண்ணை வெளியே இழுத்து, அவரது குழந்தைகள் கண் முன்னாடியே துப்பாக்கி முனையில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த வழக்கில் 2021-ல் பயங்கரவாத தடுப்பு நீதிமன்றம் விதித்த தூக்கு தண்டனையை எதிர்த்து குற்றவாளிகள் செய்த மேல்முறையீட்டு மனுவை, உயர் நீதிமன்றம் தற்போது தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான டிஎன்ஏ (DNA) ஆதாரங்கள் மற்றும் மொபைல் லொகேஷன் தரவுகள் மூலமாகவே குற்றவாளிகள் இருவரையும் போலீஸார் மிகத் துல்லியமாகக் கைது செய்தனர். உலகளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்தத் தீர்ப்பைக் குறித்துப் பதிவிட்ட பிரிட்டிஷ் எம்பி ரூபர்ட் லோவின் ட்வீட்டிற்கு, டெஸ்லா அதிபர் எலான் மஸ்க், “சபாஷ் பாகிஸ்தான்!” எனப் பகிரங்கமாகப் பாராட்டு தெரிவித்துள்ளார்.
மேலும், இதுபோன்ற கொடூரமான வன்முறை குற்றங்களுக்கு மேற்கத்திய நாடுகளும் இதே போன்ற கடுமையான மரண தண்டனைகளை வழங்க வேண்டும் என்றும் எலான் மஸ்க் வலியுறுத்தியுள்ளார். பாகிஸ்தான் நீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்பும், அதற்கு உலகப் பணக்காரர் எலான் மஸ்க் கொடுத்துள்ள ஆதரவும் சர்வதேச அளவில் தற்போதைய மிக முக்கிய ஹாட் டாபிக்காக மாறி, சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது.
