ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்து வரும் போர் பதற்றம் காரணமாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இதன் நேரடி பாதிப்பாக, இந்தியாவிலும் பெட்ரோல் விலை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, எண்ணெய் நிறுவனங்கள் ‘பிரீமியம்’ ரக பெட்ரோல் விலையை லிட்டருக்கு 2.09 ரூபாய் உயர்த்தியுள்ளன.
இந்த அதிரடி உயர்வால் டெல்லியில் ஒரு லிட்டர் பிரீமியம் பெட்ரோல் 113.77 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த மாதம் எல்பிஜி சிலிண்டர் விலை உயர்ந்ததைத் தொடர்ந்து, இப்போது பெட்ரோல் விலையும் ஏறியிருப்பது நடுத்தர வர்க்கத்தினருக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
தற்போதைக்கு சாதாரண பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை என்றாலும், வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழலால் வரும் நாட்களில் மற்ற எரிபொருட்களின் விலையும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எண்ணெய் விநியோகத்தைச் சீர் செய்ய முயற்சி எடுத்தாலும், கச்சா எண்ணெய் விலை பீப்பாய்க்கு 105 டாலருக்கும் மேல் நீடிப்பதால் இந்திய சந்தையில் இந்த விலை ஏற்றம் தவிர்க்க முடியாததாகிவிட்டது.
