பெங்களூரு போன்ற பெருநகரங்களில் ஐடி ஊழியர்கள் மற்றும் வெளியூர் இளைஞர்கள் சந்திக்கும் வாடகை வீடு தொடர்பான பிரச்சனைகள் தற்போது எல்லை மீறிப் போயுள்ளன. சமீபத்தில் பெங்களூருவில் வசித்து வந்த இளைஞர் ஒருவர் தான் வீட்டை காலி செய்த போது நடந்த அதிர்ச்சிகரமான சம்பவத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

அந்த இளைஞர் வீட்டை வாடகைக்கு எடுத்த போது முன்பணமாக (Deposit) சுமார் 70,000 ரூபாயை வீட்டு உரிமையாளரிடம் கொடுத்துள்ளார். ஆனால், அவர் வீட்டை காலி செய்துவிட்டு வெளியேறிய போது, அந்த உரிமையாளர் பெயிண்டிங் செலவு, தேய்மானம் எனப் பல காரணங்களைச் சொல்லி பெரும் தொகையைப் பிடித்துக் கொண்டு வெறும் 18,000 ரூபாயை மட்டுமே திருப்பித் தந்துள்ளார்.

இதனால் அதிர்ச்சியடைந்த அந்த இளைஞர், ஒரு மாத சம்பளத்தையே அட்வான்ஸாக வாங்கிவிட்டுத் திரும்பத் தரும்போது இப்படி ஏமாற்றுவது நியாயமா எனக் கேட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வரும் இந்த வீடியோ, பெங்களூருவில் வாடகைக்கு இருப்பவர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், “இது வாடகைதாரர்களைச் சுரண்டும் செயல்” எனப் பலரும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.