நடிகர் விஜய் தனது ‘புலி’ படத்திற்காகப் பெற்ற 15 கோடி ரூபாய் வருமானத்தை மறைத்ததாகக் கூறி, வருமான வரித்துறை விதித்த 1.50 கோடி ரூபாய் அபராதம் செல்லும் என்று சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2022-ஆம் ஆண்டு வருமான வரித்துறை விதித்த இந்த அபராதத்தை எதிர்த்து விஜய் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, அபராதம் விதித்ததில் எந்தத் தவறும் இல்லை என்று கூறி விஜய்யின் மனுவைத் தள்ளுபடி செய்தார். இன்று காலை 10:30 மணிக்கு வழங்கப்பட்ட இந்தத் தீர்ப்பு, அரசியல் களத்தில் நுழைந்துள்ள விஜய்க்கு ஒரு சிறிய பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.

​இந்த வழக்கில் வருமான வரித்துறைத் தரப்பில் வைக்கப்பட்ட வாதங்களை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், உரிய வருமானத்தை முறையாகக் கணக்கில் காட்டாதது சட்டப்படி தவறு என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளது. ஏற்கனவே லக்ஸரி கார் வரி விவகாரத்தில் நீதிமன்றத்தின் கண்டனத்துக்கு ஆளான விஜய், தற்போது இந்த வரி ஏய்ப்பு வழக்கிலும் தோல்வியைத் தழுவியிருப்பது அவர் மீதான விமர்சனங்களை அதிகரிக்கச் செய்துள்ளது. “சட்டம் தன் கடமையைச் செய்துள்ளது” என ஒரு தரப்பினர் கூறினாலும், விஜய்யின் ஆதரவாளர்கள் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளதா என ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.