தமிழ்நாட்டில் ரேஷன் அட்டைகளில் eKYC (இ-கேஒய்சி) சரிபார்ப்புப் பதிவுகளைச் செய்வதற்கு ஏதுவாக, வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி மாநிலம் முழுவதும் சிறப்பு முகாம்கள் நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்தச் சிறப்பு முகாம்கள் செயல்படும்.
முன்னதாக ரேஷன் அட்டைகளில் இ-கேஒய்சி பதிவுகளை மேற்கொள்வதற்கான கால அவகாசம் முடிவடைந்த நிலையில், பொதுமக்கள் மற்றும் பயனாளிகளின் நலன் கருதி இந்தக் கால அவகாசம் இந்த ஆகஸ்ட் மாத இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாகவே விடுபட்ட பொதுமக்கள் எளிதாகப் பதிவுகளை முடிக்க இந்தச் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ரேஷன் விநியோகத்தில் வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், தகுதியான பயனாளிகளுக்குச் சீரான சேவைகளை உறுதி செய்யவும் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்தப் பணிகளில், தற்போதைய நிலவரப்படி ரேஷன் அட்டைகளில் சுமார் 96.21 சதவீத இ-கேஒய்சி சரிபார்ப்புப் பணிகள் வெற்றிகரமாக நிறைவு பெற்றுள்ளன.
எனவே, இதுவரையிலும் இ-கேஒய்சி சரிபார்ப்பை மேற்கொள்ளாத குடும்ப அட்டாதாரர்கள் அனைவரும், வரும் 29-ஆம் தேதி நடைபெறவுள்ள சிறப்பு முகாம்களைப் பயன்படுத்தி, காலை 9 மணி முதல் மாலை 5 மணிக்குள்ளாகத் தங்களது விவரங்களை விரைந்து சரிபார்த்துக் கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
