தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அதிமுக கொரடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி பேசிக் கொண்டிருந்தபோது, குறிக்கிட்ட அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், “அக்ரி கிருஷ்ணமூர்த்தியின் லெட்டர் பேடைப் பார்த்தேன். அதில் ஓ.பன்னீர்செல்வத்தின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. இடம் மாறியும் படம் மாறவில்லை” என்று கிண்டலாகக் கருத்துத் தெரிவித்தார்.
அமைச்சர் செங்கோட்டையனின் இந்த விமர்சனத்திற்கு அதிமுக கொரடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி உடனடியாகப் பதிலளிக்க முயன்றார். இதனால் அவையில் லேசான சலசலப்பு ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது.
இதனைத் தொடர்ந்து குறுக்கிட்ட சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், “எல்லாவற்றையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளக் கூடாது. என்ன நடந்தது என்று நான் விளக்கம் சொல்லட்டுமா? இந்த மாமன்றத்திற்கும், மொத்த மக்களுக்கும் நான் சொல்லட்டுமா?” எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் அவையின் அமைதியைக் காக்கும் வகையில், “பேசாதீர்கள் என்றால் பேசாமல் இருக்க வேண்டும்” என்று உறுப்பினர்களைக் கண்டிப்புடன் சபாநாயகர் கேட்டுக்கொண்டார். இதன் மூலம் அவையில் எழுந்த விவாதம் சுமுகமாக முடிவுக்கு வந்தது.
