வெயிலின் வெளிச்சம் பரவத் தொடங்கிய அந்த அமைதியான புனே காலைப் பொழுதில், ஒரு இளம் தாய் தனது ஒரு வயது பச்சிளம் குழந்தையை மடியில் ஏந்தியவாறு, ஹவுசிங் சொசைட்டி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அந்தத் தாய்க்கும் குழந்தைக்கும் அப்போது தெரியாது, சில விநாடிகளில் அங்கு ஒரு பேரிடி காத்திருக்கிறது என்று!

திடீரென அருகில் நின்றுகொண்டிருந்த ஒரு காரின் மறைவிலிருந்து சீறிப்பாய்ந்து வந்த இரண்டு தெருநாய்களில் ஒன்று, அந்தத் தாயின் காலைக் குறிவைத்து வெறித்தனமாகக் கடித்தது. எதிர்பாராத இந்தத் தாக்குதலில் நிலைகுலைந்த தாய், வலியிலும் பயத்திலும் சமநிலையை இழந்தார். அந்தப் போராட்டத்தில் மடியில் இருந்த பிஞ்சு குழந்தை நிலைதடுமாறி பலத்த சத்தத்துடன் கீழே தரையில் விழுந்து காயமடைந்தது. இந்தத் துயரச் சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி, தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த மக்களையும் பதைபதைக்க வைத்துள்ளது.

 


இது ஏதோ ஒரு தனிப்பட்ட சம்பவம் அல்ல; பிம்பிரி-சிஞ்ச்வாட் நகராட்சிப் பகுதி முழுவதும் நாள்தோறும் அரங்கேறிவரும் ஒரு பயங்கரமான நாடகத்தின் நீட்சிதான். இந்த பகுதிகளில் ஆக்ரோஷமான நாய்க்கூட்டங்கள் சாலையில் செல்வோரைக் துரத்துவதும், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் மீது தாக்குதல் நடத்துவதும் தொடர்கதையாகி வருகிறது.

கடந்த 2021-22 ஆம் ஆண்டில் சுமார் 13,800 ஆக இருந்த நாய் கடி வழக்குகள், தற்போது 2025-26 காலப்பகுதியில் 38,000-க்கும் அதிகமாக உயர்ந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் சிக்லி பகுதியில் ஐந்து வயது சிறுமி ஒருவட்டியை ஏழு நாய்கள் சூழ்ந்து கடித்ததில், அவளுக்கு 80-க்கும் மேற்பட்ட தையல்கள் போடப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. எங்கள் பகுதியில் தெருநாய்களின் தொல்லை தாங்க முடியவில்லை என்று பலமுறை PCMC கால்நடைத்துறையிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை” என்று அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மறுபுறம், விலங்கு நல ஆர்வலர்களும் பொதுமக்களும் இதற்குக் காரணம் விலங்கு பிறப்புக் கட்டுப்பாடு மற்றும் வெறிநோய் தடுப்பூசித் திட்டங்களில் உள்ள ஓட்டைகளே என்கின்றனர். போதுமான கருத்தடை மையங்கள் மற்றும் நாய்களைப் பிடித்து வைக்கும் கூண்டுகள் இல்லாத காரணத்தினால், தெருநாய்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருவதாக அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். பிஞ்சு உயிர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இனியாவது நகராட்சி நிர்வாகம் விழித்துக்கொள்ளுமா என்பதே இப்போதைய ஒட்டுமொத்த மக்களின் கேள்வியாக உள்ளது.