பஞ்சாப் மாநிலம் ஜாலந்தரை உலுக்கிய நேஹா கொலை வழக்கில், காவல்துறை விசாரணையில் இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. முக்கியக் குற்றவாளியான உயிரிழந்த நேஹாவின் கணவர் உமங் பஸ்ஸி மற்றும் அவரது காதலி ஆகியோருக்கு இடையே பரிமாறப்பட்ட 206 பக்க வாட்ஸ்அப் சாட் விவரங்கள் தற்போது காவல்துறையின் கையில் சிக்கியுள்ளன.
இந்த அதிர்ச்சிகரமான சாட் பதிவுகள், இருவருக்கும் இடையே இருந்த கள்ளத்தொடர்பு, இரகசிய சந்திப்புகள் மற்றும் திருமணத் திட்டங்களை அம்பலப்படுத்தியது மட்டுமின்றி, தங்களது சொந்த வாழ்க்கைத் துணைகளையே தீர்த்துக்கட்ட இருவரும் தீட்டிய கோரமான சதித்திட்டத்தின் முகத்திரையையும் கிழித்தெறிந்துள்ளது. காவல்துறை விசாரணையில், இருவரும் தங்களது ரகசிய உறவை உலகத்திற்கு மறைக்க பலே திட்டங்களை போட்டது தெரியவந்துள்ளது. சத் பால் கவுர் தனது மொபைலில் உமங்கின் எண்ணை ‘தான்வி’ மற்றும் ‘ஆ’ என்ற போலிப் பெயர்களில் சேமித்து வைத்துள்ளார். அதேபோல், உமங்கும் தனது காதலி சத் பாலின் எண்ணை ‘சத்லாப்’ என்ற பெயரிலேயே சேமித்துள்ளார். சாட்டில் இருவரும் ‘பேபி’, ‘ஷோனா’ என்று கொஞ்சிக் கொண்டதுடன், ‘ஐ மிஸ் யூ சோ மச்’, ‘யூ ஆர் இன் மை மைண்ட் அண்ட் சோல்’ போன்ற தீவிரமான காதல் வார்த்தைகளையும் பகிர்ந்து கொண்டுள்ளனர்.
ஆனால், இந்த காதலுக்குப் பின்னால் ஒரு கொலைவெறி சதி ஒளிந்திருந்தது ஜனவரி 15, 2026 தேதியிட்ட சாட்டுகள் மூலம் உறுதியாகியுள்ளது. அந்தச் உரையாடலில், உமங் தனது காதலியிடம் “நீதான் முன்பு உன் கணவனைத் தீர்த்துக்கட்டுவது பற்றிப் பேசினாய்” என்று கூற, அதற்கு சத் பால் “உமங், உனக்கு எல்லாமே தெரியும்” என்று பதிலளித்துள்ளார். மேலும், வாயை மூடிக்கொண்டிருக்கும்படியும் உமங்கிற்கு அவர் எச்சரித்துள்ளார்.
ஜனவரி 24 மற்றும் 25 தேதிகளில் இருவருக்கும் இடையே திருமணம் செய்துகொள்ளும் அவசரம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. சத் பால் தரப்பிலிருந்து “நான் சொல்கிறேன், சீக்கிரம் திருமணம் செய்துகொள்வோம்” என்று மெசேஜ் அனுப்பப்பட்டுள்ளது. உமங்கும் தனது தாயாரிடம் இந்தத் உறவு குறித்து விரைவில் சொல்லிவிடுவதாகக் கூறியுள்ளார். தங்களது தற்போதைய திருமண பந்தங்களிலிருந்து விடுவித்துக் கொண்டு ஒன்றுசேர்வது, குழந்தைகளை புதிய குடும்பச் சூழலுக்கு மாற்றுவது குறித்தும் அவர்கள் விரிவாகத் திட்டமிட்டுள்ளனர்.
உடல்ரீதியான உறவு மற்றும் ஒருவருக்கொருவர் பிரிய முடியாத தவிப்புப் பற்றியும் அந்தச் சாட்டுகளில் வெளிப்படையாகப் பேசப்பட்டுள்ளது. தற்பொழுது காதலி சத் பால் கவுர் காவல்துறையின் காவலில் உள்ள நிலையில், அவரது கணவர் விஷால் சர்மாதான் இந்த முக்கிய வாட்ஸ்அப் சாட்களைப் பொதுவெளியில் அம்பலப்படுத்தியுள்ளார். இதில் 99 சதவீத சாட்டுகள் தங்களது துணைகளை அகற்றுவது மற்றும் கொலைச் சதி பற்றிக் கூறுவதாகவும் அவர் அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். இந்தத் தகவல்களை மின்னணு ஆதாரமாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
