மகாராஷ்டிர மாநில அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மருந்து ஆய்வாளர் தேர்வில் நடந்த வினாத்தாள் கசிவு விவகாரமும், அதன்பின் வெளிவந்த முக்கோணக் காதல் திரில்லர் பின்னணியும் அம்மாநிலத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தன் காதலி அரசு அதிகாரியாக மாற வேண்டும் என்ற ஆசையில், அநியாயமான வழியில் வினாத்தாளைக் கைப்பற்றி அவளுக்குக் கொடுத்து உதவினான் ஒரு காதலன்.

காதலியும் அந்த வினாத்தாளைப் படித்து மாநில அளவில் ஏழாம் இடம் பிடித்து சாதனை படைத்தார். ஆனால், வேலை கிடைத்ததும் காதலி தன்னைவிட்டுப் பிரிந்து சென்றுவிடுவாளோ என்ற பயத்திலும், அவர்களுக்குள் ஏற்பட்ட கசப்பான முறிவாலும் கோபமடைந்த அந்த நபர், MPSC அதிகாரிகளுக்குத் இரகசியமாகத் தகவல் கொடுத்து இரகசியப் புகாரை அளித்து வினாத்தாள் கசிவை வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார்.

காவல்துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், அரசுத் தேர்வு அமைப்பின் ஊழியர்கள் மற்றும் பயிற்சி மைய இயக்குநர் உட்பட ஆறு பேருக்கு இதில் தொடர்பு இருப்பது கண்டறியப்பட்டது. லட்சக்கணக்கில் பணம் கைமாறி, நிபுணர்களால் தயாரிக்கப்பட்ட இரகசிய வினாத்தாள்கள் திருடப்பட்டு, அந்தப் பெண்ணிற்குத் தாரை வார்க்கப்பட்டது அம்பலமானது.

இதில் சுவாரஸ்யம் என்னவென்றால், வினாத்தாள் கசிந்ததை அதிகாரிகளுக்குப் புகார் அளித்து ‘விசில்ப்ளோயராக’ நாடகமாடிய அதே காதலனே, கடைசியில் குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததற்காகக் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டான்.

காதல் முறிவால் ஏற்பட்ட ஆத்திரமும் பழிவாங்கும் உணர்ச்சியும், ஒட்டுமொத்தத் தேர்வு முறையின் தில்லுமுல்லுகளையும் வெளிக் கொண்டுவந்துவிட்டது. இந்த மோசடியின் விளைவாக, 44,000-க்கும் மேற்பட்ட நேர்மையான தேர்வர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியதை அடுத்து, அந்தத் தேர்வை MPSC முற்றிலும் ரத்து செய்துள்ளது.

மேலும் “காதலியின் மேல் கொண்ட மோகத்தால் ஒருவன் செய்த குற்றம், காதல் உடைந்ததும் அவனை ஜெயிலில் தள்ளியதோடு அல்லாமல், பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் கனவையும் சிதைத்துவிட்டது” எனச் சமூக ஆர்வலர்கள் வேதனையுடன் சுட்டிக்காட்டுகின்றனர்.