தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு அவரது போட்டோவுக்கு மரியாதை செலுத்திய நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, ஜெயலலிதாவின் நம்பிக்கைக்குரிய விசுவாசியாக நான் இருந்ததால் அவர் என்னை முதலமைச்சர் ஆக பதவியில் அமர்த்தினார். நான் வேண்டாம் என்று கூறிய போது கூட அவர்தான் என்னை முதலமைச்சர் ஆக்கினார்.

நான் அதிமுகவில் எந்த தவறும் செய்யவில்லை ஆனாலும் என்னை கட்சியிலிருந்து நீக்கிவிட்டனர். நான் என்ன தவறு செய்தேன் என்று அவர்கள் கூறினால் நான் அரசியலை விட்டு கூட விலக தயாராக இருக்கிறேன். அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் ஒன்று சேர்ந்தால் கூட ஜெயிக்குமா என்பது சந்தேகம் தான் என்றார்.

அதன் பிறகு தொடர்ந்து பேசிய அவர் திமுக கூட்டணி பலமாக இருப்பதாக அமித்ஷா தன்னிடம் தெரிவித்ததாக கூறினார். அதிமுக இப்படி பிரிந்து கிடந்தால் எப்படி அடுத்த தேர்தலில் ஜெயிக்க முடியும் என்று தன்னிடம் கேட்டதாகவும் அதற்கு நான் என்ன பண்ண முடியும் அவர்கள்தான் ஒப்புக்கொள்ள மாட்டார்கள் என்று பதில் அளித்ததாகவும் தெரிவித்தார்.

மேலும் திமுக கூட்டணி பலமாக இருப்பதாகவும் அந்த கூட்டணி தான் ஜெயிக்கும் என்றும் அமித்ஷா கூறியதாக ஓபிஎஸ் சொன்னது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.