திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே டாஸ்மாக் ஊழியர் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது மனைவியே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மனைவியும், அவரது கள்ளக்காதலனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மணப்பாறையை அடுத்த குளத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபாகரன் (32). இவர் அரசு டாஸ்மாக் கடையில் விற்பனையாளராகப் பணியாற்றி வந்தார். இவருக்கு அபிராமி (26) என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். கடந்த 12-ஆம் தேதி பிரபாகரன் அங்குள்ள புளிய மரத்தடியில் மர்மமான முறையில் சடலமாகக் கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த பபோலீஸார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர். பிரபாகரனின் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் இருந்ததால், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மனைவி அபிராமியே போலீஸில் புகார் அளித்திருந்தார்‌

போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில், புகார் அளித்த மனைவி அபிராமியே கொலையாளி என்பது தெரியவந்தது. அபிராமிக்கும், அவரது உறவினரான பிரபு (எ) பப்லு என்பவருக்கும் இடையே நீண்ட நாட்களாக கள்ளக்காதல் இருந்து வந்துள்ளது. கணவர் இல்லாத நேரத்தில் பிரபு அடிக்கடி வீட்டிற்கு வந்து சென்றுள்ளார்.

இவர்களது தொடர்பு பிரபாகரனுக்குத் தெரியவரவே, அவர் இருவரையும் கடுமையாகக் கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கள்ளக்காதல் ஜோடி, பிரபாகரனைத் தீர்த்துக்கட்டத் திட்டமிட்டனர்.

சம்பவத்தன்று வேலை முடிந்து வீடு திரும்பிய பிரபாகரனை, பிரபுவின் நண்பர்கள் நைசாகப் பேசி மது அருந்த அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு அளவுக்கு அதிகமாக மது ஊற்றிக் கொடுத்துள்ளனர். பிரபாகரன் முழு போதையில் இருந்தபோது, பிரபு மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து பிரபாகரனின் கழுத்தை இறுக்கிக் கொலை செய்துள்ளனர். பின்னர், கொலையை மறைக்கச் சடலத்தைச் சாலையோர மரத்தடியில் வீசிவிட்டுச் சென்றுள்ளனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக அபிராமி மற்றும் அவரது கள்ளக்காதலன் பிரபு ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், இந்தத் துணிகரக் கொலைக்கு உடந்தையாக இருந்த பிரபுவின் நண்பர்களைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.