தமிழக அரசியலில் இன்று பரபரப்பான திருப்பமாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட தேர்தல் வாக்குறுதியில் ஏற்பட்ட ஒரு ‘பெயர் மாற்றம்’ சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

சென்னையில் இன்று (பிப். 24) செய்தியாளர்களைச் சந்தித்த இபிஎஸ், அதிமுகவின் மூன்றாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டார். அப்போது, அதிமுக ஆட்சிக்கு வந்தால் “ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் 10,000 ரூபாய் கருணைத் தொகையாக வழங்கப்படும்” என்று அறிவித்தார்.

ஆனால், மக்களைக் காக்கும் தொகையை ‘கருணைத் தொகை’ என்று அழைப்பது மக்களைச் சிறுமைப்படுத்துவது போல இருப்பதாக நெட்டிசன்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட அதிமுக தலைமை, உடனடியாக அந்த அறிவிப்பில் திருத்தம் செய்து, இனி அது ‘கருணைத் தொகை’ அல்ல, மக்களின் ‘உரிமைத் தொகை’ என்று அதிகாரப்பூர்வமாகப் பெயர் மாற்றம் செய்துள்ளது.