தமிழகத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு கூட்டணிக் கணக்குகளை அதிமுக தீவிரப்படுத்தி வரும் நிலையில், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சி அக்கட்சியுடன் அதிகாரப்பூர்வமாக கைகோர்த்துள்ளது. சென்னை பசுமைவழிச் சாலையில் உள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் (தமிழக விவசாயிகள் சங்கம்) மாநிலத் தலைவர் வெட்டவலம் கே. மணிகண்டன், எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து வரும் தேர்தலில் அதிமுக கூட்டணிக்குத் தனது முழு ஆதரவைத் தெரிவிப்பதாக உறுதியளித்தார்.
இந்தச் சந்திப்பின் போது, விவசாயிகளின் நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் அக்கட்சியினர் எடப்பாடி பழனிசாமியிடம் வழங்கினர். ‘ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்’ என்ற இலக்குடன் செயல்பட்டு வரும் அதிமுக, விவசாய சமூகத்தின் வாக்குகளை உறுதி செய்யும் நோக்கில் இத்தகைய சிறிய மற்றும் சமூக அமைப்புகளைத் தன் பக்கம் ஈர்த்து வருகிறது. ஏற்கனவே பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வரும் நிலையில், இந்திய உழவர் உழைப்பாளர் கட்சியின் வருகை அதிமுக அணிக்கு கிராமப்புறங்களில் கூடுதல் பலத்தை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
