“யார் ஆதரித்தார்களோ, அவர்களின் காதையே கடிக்கிறார் விஜய்; அறையில் அமர்ந்து அரசியல் செய்துவிட்டு வாயில் வடை சுடக்கூடாது” என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், இதுவரை திமுகவை மட்டுமே பிரதான எதிரியாகக் கருதிப் பேசி வந்த நிலையில், நேற்று மாமல்லபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் அதிமுகவை “ஊழல் அடிமை சக்தி” என நேரடியாகச் சாடினார். அண்ணாவின் கொள்கைகளை மறந்துவிட்டு அதிமுக பாஜகவிடம் சரணடைந்துவிட்டதாக அவர் குற்றம் சாட்டினார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

விஜய்யின் இந்த விமர்சனத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியதாவது: “அரசியலுக்குப் புதுமுகம் வருகிறார் என உண்மையாகவே அவரை வரவேற்றோம். ஆனால் யார் ஆதரித்தார்களோ, அவர்களின் காதையே கடித்தால் நாங்கள் சும்மா இருப்போமா? அரசியல் இயக்கம் தொடங்கிவிட்டு அறையிலேயே அமர்ந்து அரசியல் செய்தால் மக்கள் ஓட்டுப் போட்டுவிடுவார்களா? இப்போது இருக்கும் புகழை வைத்து அப்படியே வெற்றி பெற்றுவிடலாம் என நினைக்கிறார்.

அரசியலுக்கு வந்தால் களத்தில் இறங்கிப் பணியாற்ற வேண்டும். ஒரு புதிய திட்டத்தைக் கொண்டு வந்துள்ளாராம்; இறந்தவர்களை வீட்டிற்கு அழைத்துத் துக்கம் விசாரிக்கிறார். உலகத்தில் எங்கும் இல்லாத நடைமுறை இது. மக்கள் மத்தியில் இதெல்லாம் வெறும் ‘பில்டப்’ தான். சினிமாவில் கதாநாயகனாக இருந்ததால் அவருக்கு இன்னும் அந்தப் பில்டப் மோகம் குறையவில்லை.”

மேலும் பேசிய அவர், “ஒவ்வொரு வீட்டிலும் எத்தனை ஓட்டு இருக்கிறது? எத்தனை வீடுகளுக்கு இவர் நேரடியாகச் சென்று பார்த்தார்? களத்தில் இறங்கி வேலை செய்யாமல் வெறும் டயலாக் பேசிக்கொண்டு, வாயிலேயே வடை சுடுகிறார் விஜய். இது எடுபடாது” எனத் தெரிவித்தார். விஜய்யின் பேச்சால் அதிமுக – தவெக இடையே நிலவிய மென்மையான போக்கு மறைந்து, தற்போது நேரடிப் போர் மூண்டுள்ளது. ஏற்கனவே அதிமுக ஐடி விங் விஜய்யை விமர்சித்திருந்த நிலையில், செல்லூர் ராஜுவின் இந்தப் பேச்சு அனலைக் கூட்டியுள்ளது.