வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் இப்போதிலிருந்து தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருகிறார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இன்று திருப்பத்தூர், ஜோலார்பேட்டை, வாணியம்பாடி பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்காக அவர் தங்கியிருந்த தனியார் விடுதியில் நிர்வாகிகள் கூட்டம் காலையில் நடைபெற்றது. அப்போது திமுக, பாமக, மதிமுக உள்ளிட்ட மாற்று கட்சியை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் கே.சி வீரமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.
இந்த சூழலில் எடப்பாடி பழனிச்சாமியின் நம்பிக்கைக்குரியவராக திகழும் தங்கமணி அதிமுகவில் இருந்து விலக இருப்பதாகவும் அவர் திமுகவில் இணைய உள்ளதாகவும் அரசியல் வட்டாரத்தில் தகவல் பரவியது. இது குறித்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்ட தங்கமணி தனது உயிர் மூச்சு இருக்கும் வரை அதிமுகவில் தான் இருப்பேன். நான் செத்தாலும் உடலில் அதிமுக கொடி தான் போர்த்த வேண்டும் என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
