தமிழ் சினிமாவில் 1976ஆம் ஆண்டு தொடங்கி பல்வேறு வெற்றிப் படங்களை வழங்கிய ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், கடந்த 2017ஆம் ஆண்டு விஜய் நடித்த ‘மெர்சல்’ படத்தை கடைசியாக தயாரித்தது. இந்த நிறுவனம் இயக்குநர் ராம நாராயணனால் நிறுவப்பட்டு, அவரது மறைவிற்குப் பின் அவரது மகன் என். ராமசாமி நிர்வகித்து வருகிறார். இந்நிலையில், 26 கோடி ரூபாய் மோசடி வழக்கில் நிறுவன உரிமையாளர் என். ராமசாமிக்கு எதிராக சென்னை எழும்பூர் நீதிமன்றம் கடும் நடவடிக்கை எடுத்துள்ளது.

மலேசியாவை தலைமையிடமாகக் கொண்ட ஐ.ஜீ குளோபல் பிலிம்ஸ் என்ற நிறுவனம், தேனாண்டாள் பிலிம்ஸுடன் கையெழுத்திட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், பல தவணைகளாக 26 கோடி ரூபாய் கடனாக வழங்கியதாகவும், இதற்கான பத்திரங்கள், ஒப்பந்தங்கள், காசோலைகள் என அனைத்தும் சட்டப்படி வழங்கப்பட்டிருந்தன என்றும் தெரிவித்தது. ஆனால், இந்த காசோலைகள் பணமின்றி வங்கி மூலம் திரும்பியதால், மோசடி வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு சென்னை எழும்பூர் பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது, தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் யாரும் ஆஜராகவில்லை. இதனால், ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட ஜாமீனில் விடக்கூடிய கைது உத்தரவை மாற்றி, தற்போது ஜாமீனில் விட முடியாததாக புதிய கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வாரண்டின் அடிப்படையில் என். ராமசாமியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணை அக்டோபர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ் திரையுலகில் பிரபலமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனமே மோசடி வழக்கில் சிக்கியுள்ளதான தகவல் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இது திரைப்படத் துறையினரிடையே பரபரப்பை ஏற்படுத்தியதோடு, சினிமா வணிகத்தில் உள்ள நம்பிக்கைகள் மீதான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.