கரூர் கூட்ட நெரிசல் வழக்கில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதன்படி கரூர் துயர வழக்கை சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்ற மாற்றியதோடு ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையில் மூன்று பேர் கொண்ட குழு இந்த விசாரணையை மேற்பார்வை செய்யும் எனவும் இது தொடர்பாக மாதந்தோறும் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. சென்னை உயர்நீதிமன்றம் அமைத்த சிறப்பு புலனாய்வு குழு விசாரணை மீது நம்பிக்கை இல்லை என தமிழக வெற்றிக் கழகத்தினர் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர்களும் சிபிஐ விசாரணை கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த வழக்கில் இன்று சிபிஐ விசாரணை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதே நேரத்தில் இந்த வழக்கை தாமாக விசாரித்த சென்னை உயர் நீதிமன்றத்திற்கு உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு அதற்கான காரணத்தை கூற வேண்டும் எனவும் உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி குறித்து தகவல் வெளிவந்துள்ளது. அவர் யார் என்று தற்போது பார்ப்போம். ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை உச்சநீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர். கடந்த 2004 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு திரிபுரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பதவியேற்றார்.
உச்சநீதிமன்றத்தில் இவர் தன்னுடைய பதவி காலத்தில் 506 அமர்வில் தீர்ப்பு வழங்கியுள்ளார். இவர் தமிழ்நாட்டின் ஜல்லிக்கட்டு உரிமையை நிலைநாட்டுவதற்கான தீர்ப்பை வழங்கிய அமர்வில் இடம்பெற்றவர். அங்கன்வாடி ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும் என்ற உத்தரவை வழங்கிய அமர்விலும் இடம்பெற்றவர். இந்திய கடற்படையில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர கமிஷன் என்ற பிரிவை உருவாக்கி தீர்ப்பு வழங்கியவர். மேலும் திருமணத்தை மீறிய உறவுகளை குற்றமற்ற தாக்குதல் மற்றும் கருணைக்கொலை உரிமைக்கு ஆதரவாகவும் தீர்ப்பு வழங்கியவர் ஆவார்.
