மேற்கு வங்க மாநிலத்தின் பர்தமான் ரயில் நிலையத்தில் நேற்று மாலை பரபரப்பான சம்பவம் இடம்பெற்றுள்ளது. மாலை 4 மணி மற்றும் 5 மணி நேரத்தில் ஒரே நேரத்தில் இரு ரெயில்கள் 4 மற்றும் 5வது நடைமேடைகளுக்கு வந்ததைத் தொடர்ந்து பயணிகள் மிகுந்த அளவில் திரண்டனர்.

 

ஏற்கனவே பண்டிகை காலமாக இருப்பதால் வழக்கத்தைவிட அதிகமான பயணிகள் இருந்தனர். ரெயில்களில் ஏறவும் இறங்கவும் பயணிகள் முண்டியடித்துச் சென்றதால் தடுக்க முடியாத கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் பலர் கீழே விழுந்து மிதிபட்டனர். இதில் 5 பெண்கள் உட்பட 8 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

உடனடியாக ரெயில்வே மருத்துவர்கள் அவர்களுக்கு முதலுதவி அளித்தனர். பின்னர் அவர்கள் பர்தமான் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயம் ஏற்பட்டவர்களில் சிலரின் நிலை சீராக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பயணிகள் பாதுகாப்பு மீதான கவலைகளை எழுப்பும் வகையில் இந்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. தற்போது ரயில்வே அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கி, எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்துள்ளனர்.